இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அடிடாஸ் தேர்வு!

Updated: Wed, Feb 22 2023 10:28 IST
Image Source: Google

ஓர் காலத்தில் இந்தியாவின் ஜெர்சி என்றால் அதில் சஹாரா என்று பெயர் எழுதி இருக்கும். இதனை 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. ஆனால் காலம் மாற மாற இந்திய அணியின் ஜெர்சி நிறமும் நிறுவனமும் மாறிக்கொண்டே வந்தது.ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓப்போ, பைஜூஸ், எம் பி எல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்ஸிக்கு ஸ்பான்சர் ஆக இருந்தனர்.

இந்த நிலையில் எம் பி எல் நிறுவனம் கடந்த ஆண்டு முடிவில் விலகியதை அடுத்து கில்லர் என்ற நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்தது. தற்போது அதன் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், தற்போது உலகின் பிரபல விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான அடிடாஸ் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு 350 கோடி ரூபாய்க்கு பேசி முடித்திருக்கிறது பிசிசிஐ. மேலும் இந்த நிறுவனம் இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் 65 லட்சம் ரூபாய் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதத்தில் தொடங்கி 2028 ஆம் ஆண்டு வரை அடிடாஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிடாஸ் நிறுவனம் வருகைக்குப் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் தரமும் டிசைனும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனத்திற்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு லக் இருக்கின்றது. பிபா உலக கோப்பையில் அர்ஜென்டினா அணிக்கு அடிடாஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.

இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி உலக கோப்பையை மெஸ்ஸி தலைமையில் வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி கைப்பற்றாத நிலையில் அடிடாஸ் நிறுவனத்தின் வருகையின் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை