ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆசிய அணிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 2 ரன்களிலும், கேப்டன் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றியும், முகமது ரிஸ்வான் 21 ரன்களுக்கும், அகா சல்மான் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக இஃப்திகார் அஹ்மத் 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் 61 ரன்களை எடுத்திருந்த இமால் உல் ஹக்கும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷதாப் கான் ஓரளவு தாக்குப்பிடித்து 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால், பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.