AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ரஷித் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது ஆஃப்கான்!

Updated: Sat, Sep 21 2024 08:34 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தி இருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ரியாஸ் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரியாஸ் ஹசன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதனையடுத்து குர்பாஸுடன் இணைந்த ரஹ்மத் ஷாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபாரமாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் குர்பாஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷாவுடன் இணைந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

பின்னர் ரஹ்மத் ஷா 50 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறக்கிய முகாது நபியும் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஸ்மதுல்ல ஒமர்ஸாய் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 86 ரன்களையும், ரஷித் கான் 6 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி, நந்த்ரே பர்க்கர், பீட்டர், ஐடன் மார்க்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - டோனி டி ஸோர்ஸி இணை நிதானமான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் டெம்பா பவுமா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களைச் சேர்த்திருந்த டோனி டி ஸோர்ஸியும் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஐடன் மார்க்ரம் 21, ரீசா ஹென்றிஸ் 17 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 34.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை