ஆசிய கோப்பை 2025: ஐசிசி விதிகளை மீறியதாக ஆஃப்கான் வீரர்களுக்கு அபராதம்!
ICC Fined: 2025 ஆசியக் கோப்பை தொடரில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக ஆஃப்கானிஸ்தானின் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்திருந்தன. இதில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ள்ன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18 நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் குரூப் பி போட்டியில் இலங்கையிடம் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்து, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் இப்போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஃப்கனிஸ்தான் வீரர்கள் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
இதில் நூர் அஹ்மத், இன்னிங்ஸின் 16ஆவது ஓவரின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும், அதேபோல் கிரிக்கெட் உபகரணங்களுக்கு சேதம் விளைவித்ததற்காக முஜீப் உர் ரஹ்மான் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இத்னையடுத்து இரு வீரர்களுக்கும் தலா ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த 24 மாதங்களில் இது அவர்களின் முதல் குற்றமாகும்.
Also Read: LIVE Cricket Score
முக்கியமாக, இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஐசிசியின் அபராதத்தையும் ஏற்றுள்ளனர். எனவே இதுகுறித்து முறையான விசாரணை எதுவும் தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், தற்சமயம் அந்த அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அடியாக விழுந்துள்ளது.