IND vs ENG: இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ஆகாஷ் தீப்!

Updated: Wed, Feb 21 2024 12:19 IST
IND vs ENG: இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ஆகாஷ் தீப்! (Image Source: Google)

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரில் நீடிக்கும் என்பதால் அவர்களும் கடும் சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக மூன்றாவது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுல் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். மேலும் அவரது உடற்தகுதையை பொறுத்தே ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம்பிடிப்பார் என்றும் பிசிசிஐ அறிவித்தது. 

இதன் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதற்காக மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்துவ் விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஜஸ்ப்ரித் பும்ரா இடத்தை முகேஷ் குமாரும், கேஎல் ராகுல் இடத்தை ரஜாத் பட்டிதாரும் நிரப்புவார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் தான் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இத்தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஆகாஷ் தீப்பிற்கு மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 

 

இந்நிலையில் நான்காவது போட்டியிலிருந்து பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், அவரது இடத்தை அறிமுக வீரரான ஆகாஷ் தீப் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 2019ஆம் ஆண்டு பெங்கால் அணிக்காக சையீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அறிமுகமான இவர், தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் கவனத்தை ஈர்த்ததுடன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாட தேர்வுசெய்யப்பட்டார். அதன்படி ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆகாஷ் தீப் அதில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  இதனைத்தொடர்ந்து அவர் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான இந்திய ஏ அணியில் இடம்பிடித்ததுடன், அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதன்மூலம் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பரத், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை