அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்; உலக சாதனை படைத்த மேகாலய வீரர்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிளேட் பிரிவில் இடம் பிடித்துள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மேகாலயா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மேகாலயா அணிக்கு அர்பித் பத்வரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார்.
மேலும் இப்போட்டியில் 23 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 207 ரன்கள் குவித்த நிலையில் அர்பித் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அஜய் துஹான் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிஷான் மற்றும் தலால் இணையும் அபாரமாக விளையாடி தங்களுடைய சதங்களைப் பதிவு செய்து அசத்தினர். இதில் கிஷன் 114 ரன்களுக்கும், தலால் 144 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆகாஷ் சௌத்ரி அபாரமாக விளையாடியதுடன் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்களை விளாசியதுடன் 11 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் மேகாலயா அணி 127 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 628 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது. அருணாச்சல பிரதேச அணியில் மோஹித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அருணாச்சல பிரதேச அணியில் அதிகபட்சமாக அமித் யாதவ் 16 ரன்களையும், அனுராக் யாதவ் 15 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்டமுடியவில்லை. இதனால் அந்த அணி 73 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மேகாலயா அணி தரப்பில் ஆர்யன் போரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் ஃபாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அருணாச்சல பிரதேச அணி மீண்டும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் முடிவில் அருணாச்சல பிரதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து அந்த அணி 526 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மேகாலய வீரர் ஆகாஷ் சௌத்ரி உலக சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 11 பந்துகளில் அரைசதம் கடந்ததன் மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுதவிர அவர் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்களை அடித்தும் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அவர் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.