டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்!
வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடரானது 20 அணிகளைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
அந்தவகையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. ஏற்கெனவே கடந்த டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணி, இம்முறையும் சம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக அந்த அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பெரும்பாலான வீரர்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க போவதில்லை என நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “முழு உடல்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருகிறேன். பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களிலிருந்து விலகுகியுள்ளேன்.இந்தத் தியாகம் நான் மீண்டும் முழு உடல்தகுதியுடன் சிறப்பான ஆல்ரவுண்டராக எதிர்காலத்தில் விளையாட உதவும்.
சமீபத்திய இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், எனது முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பந்துவீச்சில் நான் எவ்வளவு பின்தங்கியிருந்தேன் என்பதை எடுத்துக்காட்டியது. எங்களது அடுத்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டர்ஹாமிற்காக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜோஸ் பட்லர் மற்றும் அனைத்து அணி வீரர்களுக்கும் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி பிரச்சினையால் போராடி வரும் பென் ஸ்டோக்ஸ், சமீபத்தில் நடந்துமுடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாகதான் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். முழங்கால் பிரச்சினையால் சில காலமாக பந்துவீசுவதை தவிர்த்து வரும் அவர், இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் தனது பந்துவீச்சு திறனை மேம்படுத்தும் நோக்கிலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கிலும் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டி20 உலககோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது நிச்சயமாக பெரும் பின்னடவைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.