NZ vs ENG, 2nd Test: ப்ரூக், ரூட் சதம்; அதிரடி முனைப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி 2 ரன்னிலும், பென் டக்கெட் 9 ரன்னிலும், ஒல்லி போப் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இங்கிலாந்து அணி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்தது அசத்தினார்.
அத்துடன் நிறுத்தாமல் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய ஹாரி ப்ரூக் தனது 150 ரன்களையும் கடந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஜோ ரூட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 29ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தையும் கடந்தார். தொடர்ந்து இருவரும் அபாரமாக விளையாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது.
பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் முதல் நாள் ஆட்டம் 65 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களைச் சேர்த்தது. இதில் ஹாரி ப்ரூக் 24 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 184 ரன்களுடனும், ஜோ ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.