ரஞ்சி கோப்பை தொடரில் வரலாறு படைத்த அன்ஷுல் கம்போஜ்!

Updated: Fri, Nov 15 2024 23:07 IST
Image Source: Google

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 5ஆவது சுற்று ஆட்டத்தில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள கேரளா மற்றும் ஹரியான அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேரள அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குன்னமொல் 55, அக்‌ஷய் சந்தரன் 59, கேப்டன் சச்சின் பேபி 52, முகமது அசாரூதீன் 53 ரன்களைச் சேர்த்தனர். ஹரியான அணி தரப்பில் அபரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்ஷுல் காம்போஜ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹரியான அணி வீரர்கள் கேரள அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் நிஷாந்த் சந்து 29 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கேரள அணி தரப்பில் நிதீஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இப்போட்டியில் ஹரியானா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்படி இந்த போட்டியில் மொத்தம் 30.1 ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் விட்டுக் கொடுத்து 10 விக்கெட்களை அன்ஷுல் வீழ்த்தினார். மேலும் இந்த போட்டியில் அவர் 9 மெய்டன் ஓவர்களையும் வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் சாதனையை அன்ஷுல் கம்போஜ் படைத்துள்ளார். இதற்கு முன் மோகன் சட்டர்ஜி மற்றும் பிரதீப் சுந்தரம் ஆகிய இருவரும் ரஞ்சி கோப்பை தொடரில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அன்ஷுல் கம்போஜ் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை