ஒன்பது ஆண்டுகளுக்கு பின் விக்கெட் எடுத்த விராட் கோலி; கொண்டாடிய அனுஷ்கா சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 45ஆவது போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா – நெதர்லாந்து இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 128 ரன்களும், கே.எல் ராகுல் 102 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நெதர்லாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டை இழந்தாலும், மிடில் ஆர்டரில் நெதர்லாந்து அணியின் கேப்டனான எட்வர்ட்ஸ், எங்கெல்பெர்த் உள்ளிட்டோர் பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதனால் மிடில் ஓவர்களில் இந்திய வீரர்களில் விரைவாக விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இதனால் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோரும் இந்த போட்டியில் பந்துவீசினர்.
இதில் போட்டியின் 25ஆவது ஓவரை வீசிய விராட் கோலி, அந்த ஓவரில் நெதர்லாந்து அணியின் கேப்டனான ஸ்காட் எட்வர்ட்ஸின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். விராட் கோலி கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு கைப்பற்றும் விக்கெட் இதுவாகும். அதே போல் குல்தீப் யாதவ், ஜடேஜாவின் பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் விளாசி மாஸ் காட்டிய தேஜாவை, ரோஹித் சர்மா விக்கெட் எடுத்தார்.
அதே போல் ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பும்ராஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 47.5 ஓவரில் 250 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி, 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி விக்கெட் எடுத்த போது அவரது மனைவி அனுஷ்கா சர்மா கொண்டாடிய காணோளி இணையத்தில் வைரலாகி வருகிறது.