SA vs ENG, 3rd ODI: ஆர்ச்சர் வேகத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!

Updated: Thu, Feb 02 2023 10:43 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க முதலில் பந்துவீச முடிவுசெய்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய், பென் டக்கெட், ஹாரி ப்ரூக் ஆகியோர் அடுத்தடுத்து லுங்கி இங்கிடியின் பந்துவீச்சில் ஆடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி வெறும் 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் டேவிட் மாலன் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். பின்னர் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோஸ் பட்லர் சதமடிக்க, அவரைத் தொடர்ந்து டேவிட் மாலனும் சதமடித்து அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியதுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைக் கடந்தது. அதன்பின் 118 ரன்களில் டேவிட் மாலன் ஆட்டமிழக்க, அடுத்து வந்து அதிரடி காட்டிய மொயீன் அலியும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 127 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 131 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா - ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் டெம்பா பவுமா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஸ்ஸி வெண்டர் டுசெனும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

பின் 39 ரன்களில் ஐடன் மார்க்ரம் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடக்க, அவருடன் இணைந்த வெய்ன் பார்னெலும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பின் 80 ரன்களில் ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழந்து வெளியேற, வெய்ன் பார்னலும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் ஆர்ச்சரியன் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி முதலிரு போட்டிகளில் வெற்றிபெற 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை