இணையத்தில் டிரெண்ட் ஆகும் #ArrestKohli; தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திறந்தவெளியில் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் சடலம் ஒன்று கடந்த வியாழக்கிழமை கிடந்தது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டனர்.
காவல்துறை விசாரணையில், இறந்து கிடந்தவர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த வியாழக்கிழமை இரவு அவரது செல்போன் ஒரு அழைப்பு வந்ததாகவும் அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.
அதன்பின் அந்த செல்போன் அழைப்பு யாருடையது என காவல்துறையின் மேற்கொண்ட விசாரணையில் அது விக்னேஷின் நண்பர் தர்மராஜ் என்பது தெரியவந்தது. அதன்பின் சந்தேகத்தின் அடிப்படையில் தர்மராஜை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பொதுமக்களை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏனெனில் அவரிடம் நடத்திய விசாரணையில் இருவருக்கும் இடையே விராட் கோலி - ரோஹித் சர்மா தொடர்பான விவாதத்தால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை - பெங்களூர் அணிகள் மோதிய போது, பெங்களூர் அணி தோல்வியடைந்தது. அப்போது நடந்த மது விருந்தில், பேச்சாற்றல் குறைபாடுடைய தர்மராஜை பார்த்து, உன்னைபோல் தான் ஆர்சிபி அணி உள்ளது என விக்னேஷ் கிண்டல் செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் விக்னேஷ் உன்னைப்போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள் என விராட் கோலியை திட்டியுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை பேட்டால் அடித்து கொன்றுள்ளார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து ட்விட்டரில் ரோஹித் சர்மா ரசிகர்கள் #ArrestKohli என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்து இரு வீரர்களின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.