ENG vs IND: காயத்தால் அவதிப்படும் அர்ஷ்தீப் சிங்; பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
Manchester Test: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் சந்தித்த காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்தார். இதுகுறித்து வெளியான தகவலின் படி அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியில் சாய் சுதர்ஷனின் ஷாட்டைத் தடுக்க முயன்றபோது கையில் காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்ததுடன், இத்தொடரில் இருந்து விலகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அணியின் மருத்துவக் குழு அவரது காயத்தை மதிப்பிட்டு வருவதாகவும், அதன் முடிவிலேயே அவர் இத்தொடருக்கான இந்திய அணியுடன் பயணிப்பாரா இல்லையா என்பது தெரியவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அர்ஷ்தீப் சிங்கின் காயம் தீவ்ரமாக இருக்கலாம் என்றும், அவர் விளையாடுவது குறித்து சில நாள்களில் முடிவு செய்யப்படும் என்றும் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென்டெஸ்காட் உறுதிப்படுத்தியுள்ளார். அர்ஷ்தீப்பைத் தவிர, அணிக்கு மற்றொரு பின்னடைவும் ஏற்படாக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏனெனில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பும் இடுப்பு வலி காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும், அதனால் அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, அர்ஷ்தீப்புக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் இப்போது அர்ஷ்தீப் மற்றும் ஆகாஷ்தீப் இருவரும் விளையாடவில்லை என்றால், பிரஷித் கிருஷ்னாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இல்லையெனில் இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.