இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதுகுறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியாவுக்காக அதிக டி20 சர்வதேச விக்கெட்டுகள்
கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமான அர்ஷ்தீப் சிங், இந்திய அணிக்காக இதுவரை 60 டி20 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவர் இங்கிலாந்து டி20 தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார். தற்போது இந்த சாதனை யுஸ்வேந்திர சாஹலின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் 80 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
100 டி20 சர்வதேச விக்கெட்டுகள்
இதுதவிர்த்து இத்தொடரில் அர்ஷ்தீப் சிங் மேலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். கொல்கத்தா போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடிப்பார்.
அந்தவகையில் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் தனது பெயரில் வைத்துள்ளார். அவர் 53 டி20 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்தார். அவருக்கு அடுத்து நேபாள் அணியின் சந்தீப் லமிச்சானே 54 போட்டிகளில் இந்த மைல் கைல்லை எட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.