ஆஷஸ் 2023: மிரட்டும் இங்கிலாந்து, திணறும் ஆஸ்திரேலியா; வெற்றி யாருக்கு?

Updated: Mon, Jun 19 2023 23:37 IST
Ashes 2023: Australia need 174 runs with 7 wickets in hand! (Image Source: Google)

பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் விளாசினார். கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது.

இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தாலும், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் 386 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி 7 ரன்களுக்கும், பென் டக்கெட் 19 ரன்களிலும், ஒல்லி போப் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலா 46 ரன்களைச் சேர்த்திருந்த ரூட் மற்றும் ப்ரூக் இருவரும் நாதன் லையன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டொக்ஸும் தனது பங்கிற்கு 43 ரன்களை எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 20, மொயீன் அலி 19, ஒல்லி ராபின்சன் 27, ஜேம்ஸ் ஆண்டர்சர் 12 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரெலிய அணி தரப்பில் நாதன் லையன், பாட் கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 280 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் டேவிட் வார்னர் 36 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே தடுமாறி வந்த நிலையில் 13 ரன்களை மட்டுமே எடுத்து ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மிதும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதனால் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்ததுள்ளது. 

இதில் உஸ்மான் கவாஜா 34 ரன்களுடனும், ஸ்காட் போலாண்ட் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை