ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த கவாஜா; முன்னிலை நோக்கி ஆஸி!

Updated: Sat, Jun 17 2023 23:14 IST
Image Source: Google

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் நாட்டம் முடிவதற்கு முன்னதாகவே 393 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 118 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். மொத்தம் 4 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் வ்வார்னர் 8 ரன்களையும், கவாஜா 4 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். 

இதில் டேவிட் வார்னர் 9 ரன்கள் மட்டுமே எடுத்த விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷாக்னே தான் சந்தித்த முதல் பந்திலேயே ஸ்டூவர்ட் பிராடிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை 16 ரன்களில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெளியேற்றினார்.  

இதனால் 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த கவாஜா - டிராவிஸ் ஹெட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

பின் 50 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேமரூன் க்ரீனும் 38 ரன்களை எடுத்த நிலையில் மொயீன் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். ஆனாலும் தனது சிறப்பான ஆட்டத்தை கைவிடாத உஸ்மான் கவாஜா சதமடித்து ஆஸ்திரேலிய அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றார். 

அவருக்கு துணையாக களமிறங்கிய அலெக்ஸ் கேரியும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அண் 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்தது. இதில் உஸ்மான் கவாஜா 126 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை