இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியி உதறிய ஆஷிஷ் நெஹ்ரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனான பிசிசிஐ ஒப்பந்த முடிவுக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், 2 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். அவரின் பதவிக்காலம் முடிவடைந்த சூழலில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இதனால் என்சிஏ தலைவராக உள்ள விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், டி20 அணிக்கு என்று பிரத்யேக பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் இந்திய அணி டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவை அணுகியுள்ளது. இவர் ஏற்கனவே குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். குஜராத் அணி அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றதுடன், கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதுமட்டுமல்லாமல் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இதனால் இவர்களால் கோப்பையை வெல்ல முடியும் என்ற எண்ணத்துடன் பிசிசிஐ தரப்பில் இந்திய டி20 அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு நெஹ்ரா அணுகப்பட்டுள்ளார். ஆனால் நெஹ்ரா தரப்பில், பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க விருப்பமில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இருவருடனும் பிசிசிஐ தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆலோசனையின் போது, ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று இருவரும் கூறியுள்ளார். அடுத்த டி20 உலகக்கோப்பை வரை ராகுல் டிராவிட்டுக்கு கால நீட்டிப்பு வழங்கலாம் என்று ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே நீடிப்பார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ராகுல் டிராவிட் பொறுப்பில் இருக்கும் சூழலில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளராக பரஸ் ஆம்ரே மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப் ஆகியோரும் தங்களது பதவியில் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.