இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமியுங்கள் - ஆஷிஷ் நெஹ்ரா 

Updated: Sun, Nov 07 2021 18:46 IST
Image Source: Google

கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017ஆம் ஆண்டு முதல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார். கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். 

ஆனாலும் ஐசிசி டிராபியை வெல்லவில்லை என்ற விமர்சனம் கோலி மீது இருந்துவருகிறது. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி, அதில் பாகிஸ்தானிடம் தோற்றது. 2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்திடம் தோற்றது.

என்னதான் இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்தாலும்,  உலக கோப்பையை வெல்லாதது கோலியின் கேப்டன்சி கெரியரில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. ஐபிஎல்லிலும் கோப்பையை வென்றதில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது. இவையெல்லாம் சேர்ந்து ஒரு மெகா நெருக்கடியாக உருவெடுத்ததன் விளைவாக, அவரது பேட்டிங் ஃபார்மும் கடந்த 2 ஆண்டுகளாக மோசமாக உள்ளது. 

அதுமட்டுமல்லாது, ஒரு கேப்டனாக அவரது அணி தேர்வு தொடர்ச்சியாக விமர்சனங்களை சந்தித்து வந்திருக்கிறது. இதனால் விராட் கோலி, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பணிச்சுமையை குறைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், கேப்டன்சியிலிருந்து விலக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார் என்பதே உண்மை.

டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 அணியின்   கேப்டன்சியிலிருந்து விலகும் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலக நேரிடும்.  இதையடுத்து, கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக யார் பொறுப்பேற்பார் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். 

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படத்தான் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆனால் சிலர் ராகுலை நியமிக்கலாம் என்றும், சிலர் ரிஷப் பந்தை நியமிக்கலாம் என்றும் கருத்து கூறிவரும் நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா, இவர்கள் யாருமே வேண்டாம் என்று சர்ப்ரைஸாக ஒரு தேர்வு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, “ரோஹித் சர்மாவின் பெயருக்கு அடுத்து, ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் பெயர்களையும் கேப்டன்சிக்கான போட்டியில் கேள்விப்படுகிறோம். ரிஷப் பந்த் உலகம் முழுதும் பயணம் செய்து ஆடியுள்ளார்; டிரிங்ஸும் தூக்கியுள்ளார்; அணியிலிருந்து ஓரங்கட்டவும் பட்டிருக்கிறார். 

Also Read: T20 World Cup 2021

மயன்க் அகர்வாலின் காயத்தால் ராகுல் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றார். ஆனால் பும்ரா  3 விதமான போட்டிகளிலும் நிரந்தர இடம்பிடித்துள்ளார். எனவே பும்ராவை கேப்டனாக நியமிக்கலாம். வேகப்பந்து வீச்சாளரை  கேப்டனாக நியமிக்கக்கூடாது என ரூல்புக்கில் ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை