BBL 12: ஹாபர்ட் ஹரிகேன்ஸை 6 ரன்களில் வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Thu, Dec 22 2022 19:13 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 14 ஓவர்களாக குறைப்பட்டது.

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு குர்டின் பேட்டர்சென் - ஜோஷ் பிலிப் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் தந்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டர்சென் 38 ரன்களிலும், பிலீப் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அதன்பின் களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 19 ரன்களையும், ஹைடன் கெர் 32 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 14 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பென் மெக்டர்மோட் 17, டி ஆர்சி ஷார்ட் 13, மேத்யூ வேட் 15, சதாப் கான் 14, டிம் டேவிட் 8, ஜேம்ஸ் நீஷம் 5 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். 

இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஆசிஃப் அலி 13 பந்துகளில் 4 பவுண்டர், 3 சிக்சர்களை பறக்கவிட்டு 41 ரன்களைச் சேர்த்து வெற்றிக்காக போராடினார். இருப்பினும் 14 ஓவர்கள் முடிவில் ஹரிகேன்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை