ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் மெல்போரன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்டாக நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் (38), கவாஜா (42) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
மழைக்காரணமாக நேற்றைய ஆட்டத்தின் பெரும்பகுதி ஆட்டம் தடைபட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. இதில் மார்னஸ் லபுஷாக்னே 44 ரன்களுடனும், டிராவிட் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று தொடங்கிய 2ஆவது நாள் ஆட்டத்தில் விளையாடிய லபுஷாக்னே 63 ரன்னில் ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் வெளியேறினார்.
அதன்பின் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் அலேக்ஸ் கேரி (4), ஸ்டார்க் (9), கம்மின்ஸ் (13), லயன் (8) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 41 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 318 ரனனில் ஆல்அவுட் ஆனது.பாகிஸ்தான் தரப்பில் அமிர் ஜமால் 3 விக்கெட்டுகளையும், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இமாம் உல் ஹக் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுபக்கம் இருந்த அப்துல்லா ஷஃபிக்கும் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின் 62 ரன்களில் அப்துல்லா ஷஃபிக் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசாமும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின் ஷான் மசூத் 52 ரன்களிலும், சௌத் சகீல் 9 ரன்களிலும், அகா சல்மான் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்துள்ளது. இதில் முகமது ரிஸ்வான் 29 ரன்களுடனும், அமர் ஜமால் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், நாதன் லையன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.