ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் 60 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியிடம் அந்த இடத்தை இழக்க வாய்ப்புள்ளது. 

Advertisement

அதன்படி வெற்றி கட்டாயத்துடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

அதன்பட் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் கைல் வெரெய்ன் மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். வெரெய்ன் 64 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 152 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கம்மின்ஸ் மற்றும் போலாண்ட் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், காசிசோ ரபாடா வீசிய முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகிய இருவரும் தலா 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

இதனால் 27 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி 4ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்களை சேர்த்தனர். இதில் ஸ்மித் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக பேட்டிங் செய்த அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட் 78 ரன்களுடன் களத்தில் இருக்கும் நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை அடித்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 92 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

Advertisement

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சிடம் சரணடைந்தது. அதிலும் அந்த அணியில் டெம்பா பவுமா (29), ஸோண்டோ (36), கேசவ் மஹாராஜ் (16) ஆகியோரைத் தவிற மற்ற வீரர்களும் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களோடும், டக் அவுட்டாகியும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி, ஆஸ்திரேலிய அணிக்கு வெறும் 35 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்த இன்னிங்ஸிலும் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்ன, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - கேமரூன் கிரீன் ஆகியோரும் ஒற்றை ரன்களைக் கூட எடுக்காமல் களத்தில் இருந்தார். 

Advertisement

ஆனால் அதற்கு மாறாக தென் ஆப்பிரிக்க அணி இந்த இன்னிங்ஸில் கூடுதலாக 19 ரன்களை வாரி வழங்கியது. இப்படி 35 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சில் கூடுதலாக 19 ரன்களை வழங்கி படுதோல்வியைச் சந்திதது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கிலும் தொடரில் முன்னிலையை பெற்றுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News