AUS vs WI, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்ட லபுசாக்னே; தொடர்ந்து மிரட்டும் டிராவிஸ் ஹெட்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நேற்று பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மார்னஸ் லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதமடித்து அசத்தியதன் மூலம், ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை மார்னஸ் லபுசாக்னே 120 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 114 ரன்களுடனும் தொடங்கினர். இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய லபுசாக்னே - டிராவிஸ் ஹெட் இணை தொடர்ந்து ஸ்கோரை உயர்த்தினர்
இதனால் இப்போட்டியிலும் இரட்டைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுசாக்னே 163 ரன்கள் எடுத்த நிலையில், டெவான் தாமஸிடம் விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய காம்ரூன் கிரீன், டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 436 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் டிராவிஸ் ஹெட் 172 ரன்களுடன் விளையாடி வருகிறார்.