AUSA vs INDA: சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்தியா ஏ!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது இம்மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியானது மெக்காயில் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 107 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 36 ரன்களைச் சேர்த்தர். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையாடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியிலும் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்கெடுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 39 ரன்களையும், கூப்பர் கனொலி 37 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்த்னர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் 5 ரன்னிலும், ஈஸ்வரன் 12 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்துள்ள சாய் சுதர்ஷன் - தேவ்தத் படிக்கல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்திய நிலையில், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களை கடந்தது. இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 208 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சாய் சுதர்ஷன் 96 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 120 ரன்கள் முன்னிலையுடன் இந்திய ஏ அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.