மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

Advertisement

அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் பிலிம்மருடன் இணைந்த அமெலியா கெர்ரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீராங்கனை பிலிம்மர் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் பிலிம்மர் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 40 ரன்களைச் சேர்த்திருந்த அமெலியா கெர்ரும் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சோஃபி டிவைன், மேடி க்ரீன் உள்ளிட்ட வீராங்கனைகளில் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறிய காரணத்தால், நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட் மற்றும் ஜார்ஜியா வர்ஹேம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனை பெத் மூனி 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த கேப்டன் அலிசா ஹீலி மற்றும் ஜார்ஜியா வர்ஹேம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலிசா ஹீலி 27 ரன்களுக்கும், ஜார்ஜியா வர்ஹேம் 26 ரன்களுக்கும் என தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லிஸ் பெர்ரி 36 ரன்களுக்கும், ஆஷ்லே கார்ட்னர் 33 ரன்களுக்கும் என தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் அடுத்து வந்த லிட்ச்ஃபீல்ட், மெக்ராத் இணை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News