மகளிர் ஆஷஸ்: ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து; தொடரை தக்கவைத்தது ஆஸி!

Updated: Wed, Jul 19 2023 12:14 IST
மகளிர் ஆஷஸ்: ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து; தொடரை தக்கவைத்தது ஆஸி! (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டவுண்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி, டாமி பியூமண்ட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹீதர் நைட் - நாட் ஸ்கைவர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்துடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 67 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ஹீதர் நைட் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின்னும் அதிரடியாக செயல்பட்ட நாட் ஸ்கைவர் மீண்டும் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அலிஸ் கேப்ஸி 5 ரன்களுக்கும், டேனியல் வையட் 43 ரன்களுக்கும், எமி ஜோன்ஸ் 6 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாட் ஸ்கைவர் 15 பவுண்டரி, ஒரு சிக்சர் என 129 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், ஜெஸ் ஜோனசன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 44 ஓவர்களில் 269 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி 7 ரன்னிலும், லிட்ச்ஃபீல்ட் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 35.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் கேட் கிராஸ் 3 விக்கெட்டுகளையும், லாரன் பெல், சார்லோட் டீன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றினர். அதேசமயம் நடப்பாண்டு மகளிர் ஆஷஸ் தொடரில் இரு அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளதால், ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஆஷஸ் தொடரை தக்கவைத்துள்ளது. மேலும் இத்தொடரின் ஆட்டநாயகிகளாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னரும், இங்கிலாந்தின் நாட் ஸ்கைவரும் தேர்வுசெய்யப்பட்டனர்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை