IND vs AUS, 2nd Test: இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்; அதிரடி காட்டும் ஆஸி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட், டெல்லியில் நேற்று தொடங்கியது. 2017க்குப் பிறகு டெல்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கவாஜா 81 ரன்கள் எடுத்தார். ஷமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 13, ராகுல் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று கேஎல் ராகுல் நல்லவிதமாக ஆடுவது போல தெரிந்தாலும் 41 பந்துகளில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் நாதன் லையன் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள் இந்திய பேட்டர்கள். ரோஹித் சர்மா 32, ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
அதன்பின் தனது 100ஆவது டெஸ்டை விளையாடும் புஜாரா டக் அவுட் ஆனார். முதல் டெஸ்டில் சரியாகப் பந்துவீசாத லையன், இந்த டெஸ்டில் இந்திய அணிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். 2ஆவது நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கோலிக்கு நல்ல இணைந்து விளையாடி வந்த ஜடேஜா 74 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் எடுத்து, மர்ஃபி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
இதனால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு கோலியைப் பெரிதாக நம்பியது இந்திய அணி. 84 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த கோலி சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழந்தார். குகெலீஜ்ன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தார். இதை எதிர்த்து டிஆர்எஸ் வழியாக மேல்முறையீடு செய்தார் கோலி. பந்து முதலில் கால்காப்பில் பட்டதா இல்லை பேட்டில் பட்டதாக எனக் குழப்பம் ஏற்பட்டது. எனினும் தொலைக்காட்சி நடுவர் இல்லிங்வொர்த், கள நடுவரின் தீர்ப்பை உறுதி செய்தார். இதனால் கோலி மிகவும் அதிருப்தி அடைந்தார்.
இதுபோன்ற தருணங்களில் இந்திய அணியைக் காப்பாற்றி வந்தவர் ரிஷப் பந்த். ஆனால் அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள பரத், 6 ரன்களில் லையன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 5ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார் லையன். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் - 139/7. இதனால் 175 ரன்களுக்குள் ஆட்டமிழக்கும் அபாயத்தை எதிர்கொண்டது இந்தியா. 8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்ஸர் படேலும் அஸ்வினும் இந்திய அணியின் இன்னிங்ஸில் திருப்புமுனையை உண்டாக்கினார்கள். கவனமாக ரன்கள் சேர்த்து மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்.
தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 62 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதன்பிறகும் இருவரும் மேலும் ரன்கள் சேர்த்து இந்திய அணி 200 ரன்களைத் தாண்ட உதவினார்கள். 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அட்டகாசமான அரை சதத்தை அடித்தார் அக்ஷர் படேல். இந்திய அணி 75 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது.
பின் 71 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த அஸ்வின், கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அக்ஸர் படேல் 74 ரன்களிலும் ஷமி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 83.3 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 1 ரன் முன்னிலை பெற்றது. லயன் 5 விக்கெட்டுகளும் மேத்யூ குனேமன், மர்ஃபி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இதையடுத்து இர்னடாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 6 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - மார்னஸ் லபுசாக்னே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசினர்.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 39 ரன்களையும், மார்னஸ் லபுசாக்னே 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.