ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் நியூசிலாந்து மகளிர் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிலிம்மர் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அமெலியா கெர் 7 ரன்களுக்கும், ஹாலிடே 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூஸி பேட்ஸும் 33 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மேடி க்ரீன் தனது பங்கிற்கு 35 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பந்துவீசிய 6 வீராங்கனைகளும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் பெத் மூனி 13 ரன்களுக்கும், கேப்டன் அலிசா ஹீலி 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் தஹிலா மெக்ராத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனையடுத்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜார்ஜியா வர்ஹாம் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், லிட்ச்ஃபில்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News