சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது அதிரடியாக தொடங்கினாலும், அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக உஸ்மான் கான் 38 ரன்களையும், பாபர் ஆசாம் 36 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டோன், மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணியானது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் 36 ரன்களைச் சேத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை பாபர் ஆசாம் பெற்றுள்ளார். முன்னதாக இந்திய அணியின் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.