விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை முறியடித்தா பாபர் ஆசாம்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் அசாமும் வளர்ந்துள்ளார் பாபர் அசாம். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் வரிசையில் பாபர் அசாமும் இணைந்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார் பாபர் அசாம். பழைய பேட்டிங் சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். ஒருகட்டத்தில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், அவரது சாதனைகளை ஒவ்வொன்றாக தகர்த்துவருகிறார் பாபர் அசாம்.
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 173 ரன்களை குவிக்க, 174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 69, பாபர் அசாம் 55 ஆகிய இருவரின் அரைசதம் மற்றும் நவாஸின் அதிரடியான ஃபினிஷிங்கால் கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 55 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் பாபர் அசாம். 251 சர்வதேச இன்னிங்ஸ்களில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை பாபர் அசாம் எட்டியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகத்தில் 11,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
இதற்கு முன் விராட் கோலி 261 சர்வதேச இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களை எட்டியதுதான் சாதனையாக இருந்தது. 251 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களை எட்டி விராட் கோலியின் சாதனையை தகர்த்துள்ளார்.
பாபர் அசாம் 75 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 3,122 ரன்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 92 இன்னிங்ஸ்களில் 4,664 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 86 இன்னிங்ஸ்களில் 3,216 ரன்களையும் குவித்துள்ளார்.