சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!

Updated: Sat, May 11 2024 14:33 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது கேப்டன் பாபர் ஆசாம், இஃப்திகர் அஹ்மத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமகா கேப்டன் பாபர் அசாம் 57 ரன்களையும், இஃப்திகார் அஹ்மத் 37 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கிரேய்க் யங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த பால்பிர்னி - ஹேரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் கடந்த பால்பிர்னி 77 ரன்களில் விக்கெட்டை இழக்க, 36 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேரி டெக்டரும் ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், கர்டிஸ் காம்பேர் அபாரமாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் பாபர் ஆசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 38ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை சமன்செய்துள்ளார். 

 

இதற்கு முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி 109 இன்னிங்ஸ்களில் 38 அரைசதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், பாபர் ஆசாம் 108 இன்னிங்ஸில் 38 அரைசதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியளில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 143 இன்னிங்ஸ்களில் 34 அரைசதங்களை அடித்து மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 27 அரைசதங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளார். 

இதுதவிர்த்து அனைத்து வடிவிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 அரைசதங்களை அடித்த நான்காவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், இந்திய அணியின் விராட் கோலி ஆகியோர் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்களை கடந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை