ரோஹித் சர்மா சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

Updated: Sun, May 26 2024 13:54 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 32 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், இப்போட்டியில் அதனை முறியடித்து பாபர் ஆசாம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

அதன்படி இப்போட்டியில் பாபர் ஆசாம் 19 ரன்களை எடுத்திருந்த போது ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து அசத்தினார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 4037 ரன்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் 3987 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திலு, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் நான்காம் இடத்தையும், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்

  • விராட் கோலி - 4037 ரன்கள் (109 இன்னிங்ஸ்)
  • பாபர் ஆசாம் - 3997 ரன்கள் (111 இன்னிங்ஸ்)
  • ரோஹித் சர்மா - 3974 ரன்கள் (143 இன்னிங்ஸ்)
  • பால் ஸ்டிர்லிங் - 3589 ரன்கள் (141 இன்னிங்ஸ்)
  • மார்ட்டின் கப்தில் - 3531 ரன்கள் (118 இன்னிங்ஸ்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை