வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி இன்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் 8 ரன்களுக்கும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 16 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான், கரிம் ஜானத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய முகமது நபி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தா, மறுபக்கம் நஜிபுல்லா ஸத்ரான் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஸஸாயும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 4 சிக்சர்களை விளாசி 33 ரன்களைச் சேர்த்திருந்த அஸ்மதுல்லா விக்கெட்டை இழந்தார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நபி அரைசதம் கடந்ததுடன், 54 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ரோனி தலுக்தர் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, லிட்டன் தாஸ் 18 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன் 14 ரன்களுக்கும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 19 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த தாஹித் ஹிரிடோய் - ஷமிம் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாமிம் ஹொசைன் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த ஹிரிடோய் 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.