வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவிலுள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - பிலீப் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சால்ட் 7 ரன்களிலும், டேவிட் மாலன் 11 ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராய் தனது அரைசதத்தை கடந்தார். 

Advertisement

பின்னர் அவருடன் இணைந்த் கேப்டன் ஜோஸ் பட்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஜேசன் ராய் சதம் விளாச, ஜோஸ் பட்லரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 132 ரன்களைச் சேர்த்திருந்த ஜேசன் ராய் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மொயீன் அலி, சாம் கரண ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மொயின் அலி 42 ரன்களையும், சாம் கரண் 33 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் அடுத்தடுத்து முதல் பந்திலேயே விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிமும் 4 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கரண் பந்துவீச்சிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் - ஷாகிப் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிம் இக்பால் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஷாகிப் அல் ஹசன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Advertisement

அதன்பின் வந்த மஹ்முதுல்லா 32 ரன்களையும், அஃபிஃப் ஹொசைன் 23 ரன்களையும், டஸ்கின் அஹ்மத் 21 ரன்களையும் சேர்க்க மற்றுஅ வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 44.4 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரண், ஆதில் ரஷித் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜேசன் ராய் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News