BAN vs IND 3rd ODI: ரசிகர்களுக்கு விருந்து படைத்த இஷான் கிஷன், விராட் கோலி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தார். இதனால் இந்திய அணியும் 15 - 1 விக்கெட் என இக்கட்டான சூழலில் இருந்தது. அதன் பின்னர் வந்த முன்னணி வீரர் விராட் கோலியும் தொடக்கத்தில் இருந்தே பதற்றத்துடன் காணப்பட்டார். எந்த பந்தில் அவுட்டாகப்போகிறார் என்பது போல ரசிகர்களும் பதறினர்.
அதற்கேற்றார் போலவே ஒரு பந்து அமைந்தது. ஆட்டத்தின் 6ஆவது ஓவரில் மெஹிடி ஹாசன் வீசிய 3ஆவது பந்தை கோலி மிட் ஃப்ளிக் ஷாட் ஆட முயன்றார். ஆனால் துரதிஷ்டவசமாக பந்து நேராக ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த கேப்டன் லிட்டன் தாஸிடம் சென்றது. அழகாக சென்ற அந்த கேட்ச்-ஐ அவர் பிடிக்க தவறவிட்டார்.
கோலியை அப்படியே விட்டுவிடக்கூடாது என முடிவெடுத்த லிட்டன் தாஸ் அவரை வீழ்த்த பல வியூகங்களை வகுத்தார். ஆனால் விராட் கோலி தனது டிராக்கையே மாற்றினார். அதாவது ஒவ்வொரு ஓவரிலும் இஷான் கிஷானை அதிரடி காட்ட கூறிவிட்டு, மிகவும் நிதானமாக பார்ட்னர்ஷிப்பை மட்டும் கொடுத்தார் விராட் கோலி.
அதாவது ஒரு ஓவரில் 5 பந்தை இஷான் கிஷானை அதிரடி காட்டவைத்துவிட்டு, ஒரே ஒரு பந்தை மட்டும் தான் எடுத்துக்கொண்டார். அதிலும் ஸ்ட்ரோக் வைக்காமல் சிங்கிள் அடித்து ஸ்ட்ரைக்கை கொடுத்துக்கொண்டே இருந்தார். மேலும் இஷானுக்கு எப்படி ஆட வேண்டும் என அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார்.
அவரின் இந்த வியூகத்தால் 2ஆவது விக்கெட்டிற்கு இருவரும் சேர்ந்து 200 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதன் மூலம் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 85 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த 18 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.
மறுபுறம் விராட் கோலியும் நிதானமாக விளையாடியே 54 பந்துகளில் 65ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதேசமயம் மறுபக்கமோ பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி வந்த இஷான் கிஷான் 126 பந்துகளி தனது முதல் சர்வதேச இரட்டை சதத்தை பதிசெய்து மிரட்டினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய நான்காவது இந்திய வீரர் எனும் சாதனைக்கும் சொந்தக்காரரானார்.
அதன்பின் 210 ரன்களில் இஷான் கிஷான் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களோடு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிக்சர் விளாசி தனது 44ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்தார் விராட் கோலி. மேலும் இது அவரது 72ஆவது சர்வதேச சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கேஎல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலியும் 113 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த அக்ஸர் படேல் 20 ரன்களோடு பெவிலியன் திரும்ப, வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 37 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத், ஷாகிப் அல் ஹசன், எபோடட் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.