BAN vs IRE, Test: முஷ்பிக்கூர் அபார சதம்; தடுமாறும் அயர்லாந்து!
அயர்லாந்து கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வங்கதேச அணி வென்றது. இந்த நிலையில் வங்கதேசம்-அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட் செய்த அயர்லாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 77.2 ஓவர்களில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 50 ரன்னும், விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் 37 ரன்னும், கர்டிஸ் கேம்பர் 34 ரன்னும், மார்ட் அடைர் 32 ரன்னும் எடுத்தனர். வங்கதேச தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டும், எபாதத் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். டெஸ்ட் போட்டியில் தைஜூஸ் இஸ்லாம் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 11ஆவது முறையாகும்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ரன் எதுவும் எடுக்காமலும், தமிம் இக்பால் 21 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மொமினுல் ஹக் 12 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணியில் மொமினுல் ஹக் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹிம் - ஷாகிப் அல் ஹசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிக்கூர் ரஹிம் சதமடித்து அசத்தினார். அதன்பின் முஷ்பிக்கூர் ரஹிம் 126 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாகிப் அல் ஹசனும் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த லிட்டன் தாஸ் 43 ரன்களையும், மெஹிதி ஹசன் அரைசதம் கடந்த கையோடு 55 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆண்டி மெக்பிரைன் 6 விக்கெட்டுகளையும், மார்க் அதிர், பெஞ்சமின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து 101 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தந்து. அந்த அணியின் தொடக்க வீரர் முர்ரே கம்மின்ஸ் ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் மெக்கலம் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஆண்டி மெக்பிரைன் 3 ரன்களிலும், கர்டிஸ் காம்பேர் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த ஹேரி டெக்டர் - பீட்டர் மூர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. இதில் டெக்டர் 8 ரன்களுடனும், பீட்டர் மூர் 10 ரன்களிலும் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் ஷாகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.