இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு நிஷன் மதுஷ்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்தனர். இதன்மூலம் முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் நிஷன் மதுஷ்கா 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த குசால் மெண்டிஸ் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 93 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய தினேஷ் சண்டிமால் - கேப்டன் தனஞ்செயா டி சில்வா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்துள்ளது.

இதில் தினேஷ் சண்டிமால் 34 ரன்களுடனும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News