வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமீயா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் அரைசதம் கடந்திருந்த தன்ஸித் ஹசன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய சௌமியா சர்காரும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் தாவ்ஹித் ஹிரிடோயை தவிர்த்த மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் லுக் ஜோங்வா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு இப்போட்டியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் பிரையன் பென்னட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா அதிரடியாக விளையாடி 4 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான மருமணியும் 13 ரன்களில் நடையைக் கட்டினார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானதன் காம்பெல் - கிளைவ் மடாண்டே இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் மடாண்டே 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரியான் பார்ல் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜானதன் காம்பெல்லும் ஒரு பவுண்டரி, சிக்ஸர்களுடன் 31 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய லுக் ஜொங்வா, ஃபராஸ் அக்ரம் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்கமால் அணியின் வெற்றிக்காக போராடிய வெல்லிங்டன் மஸகட்ஸா 19 ரன்களைச் சேர்த்த நிலையிலும் ஜிம்பாப்வே அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

வங்கதேச அணி தரப்பில் நட்சத்திர வீரர்கள் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், முஸ்தஃபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News