பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வங்கதேச அணி மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் சென்று பயிற்சியில் ஈடுபட்டுவரும் வங்கதேச அணியில் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பயிற்சி ஆட்டத்தின் போது மஹ்முதுல் ஹசன் தனது இடுப்பு பகுதியில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் அடிப்படையில் அவரது காயம் சரியாக சில வாரங்கள் தேவைப்படும் என்பதால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. அதேசமயம் தொடரில் இருந்து விலகியுள்ள மஹ்முதுல் ஹசன் ஜாயிற்கு பதிலாக எந்தவொரு மாற்று வீரராக யாரையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21 ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்குகிறது. மூன்று நாள் பயிற்சிக்குப் பிறகு வங்கதேச அணி இன்றைய தினம் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.
பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி