ரிஷாத் ஹோசைன் அபார பந்துவீச்சு; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!
வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் சைஃப் ஹசன் 3 ரன்னிலும், சௌமியா சர்க்கார் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாவ்ஹித் ஹிரிடோய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஹிரிடோய் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, தாவ்ஹித் ஹிரிடோயும் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மஹிதுல் இஸ்லாம் 46 ரன்களையும், ரிஷாத் ஹோசைன் 26 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக வங்கதேச அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - அலிக் அதானஸ் இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் அடித்த நிலையில், அதனாஸ் 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங்கும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஷாய் ஹோப் 15 ரன்னிலும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 12 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: LIVE Cricket Score
இதன் மூலம் வங்கதேச அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரிஷாத் ஹோசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.