சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த வங்கதேச அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் வங்கதேச அணியின் அனுபவ வீக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது தனது சமூக வலைதள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும் அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வங்கதேச அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், "இன்று முதல் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கடந்த சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது, அதனால் இந்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான முஷ்ஃபிக்கூர் ரஹீம், வங்கதேச கிரிக்கெட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,795 ரன்கள் எடுத்துள்ளார், அதில் 9 சதங்கள் மற்றும் 49 அரை சதங்கள் அடங்கும்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். இது தவிர விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர், 243 கேட்சுகள் மற்றும் 56 ஸ்டம்பிங் ஆகியவற்றை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.