வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இந்நிலையில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முன்றாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு சைஃப் ஹசன் - சௌமியா சர்க்கார் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். மேற்கொண்டு இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைஃப் ஹசன் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 80 ரன்களிலும், சௌமியா சர்க்கார் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 91 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர்.
மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 44 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 28 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், அலிக் அதனேஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டர்கள் இந்த முறையும் சொதப்பினர். தொடக்க வீரர்கள் அலிக் அதனஸ் 15 ரன்களிலும், பிராண்டன் கிங் 18 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அகீம் அகஸ்டே, கேசி கார்டி, கேப்டன் ஷாய் ஹோப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ் உள்ளிட்டோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, அந்த அணி 30.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம் தரப்பில் நசும் அஹ்மத், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் வங்கதேச அணி 179 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.