பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் முஷ்ஃபிக்கூர் ரஹீம் சதம் மற்றும் லிட்டன் தாஸ், சாத்மான் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், மொமினுல் ஆகியோரது அரைசதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 565 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
வங்கதேச அணி தரப்பில் அபாரமான விளையாடிய முஷ்ஃபிக்கூர் ரஹீம் 191 ரன்களையும், ஷாத்மான் இஸ்லாம் 93 ரன்களையும், மெஹிதி ஹசன் 77 ரன்களையும், லிட்டன் தாஸ் 56 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, குர்ராம் ஷஸாத் மற்றும் முகமது அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி மீண்டும் தடுமாறியது.
இதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சௌம் அயூப் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்ச்டை இழந்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்தது 23 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து இப்போட்டியின் கடைசி நாளான இன்று அப்துல்லா ஷஃபிக் 12 ரன்களுடனும், கேப்டன் ஷான் மசூத் 9 ரன்களுகுடனும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் கேப்டன் ஷான் மசூத் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசம் 22 ரன்களை எட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய சௌத் ஷகீலும் ரன்கள் ஏதுமின் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷஃபிக்கும் 37 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து வந்த ஆகா சல்மானும் முதல் பந்துடன் நடையைக் கட்டினார். இதனால் பாகிஸ்தான் அணி 5ஆம் நாள் உணவு இடைவேளையின் போது 108 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பொற்ய்ப்புடன் விளையாடி வந்த முகமது ரிஸ்வான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஸ்வானும் விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் வங்கதேச அணிக்கு 30 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடி வங்கதேச அணிக்கு ஜாகிர் ஹசன் மற்றும் ஷாத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஜாகிர் ஹசன் 15 ரன்களையும், சாத்மான் இஸ்லாம் 9 ரன்களையும் சேர்க்க வங்கதேச அணியானது 6.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் வங்கதேச அணி முதல் முறையாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம் ஆட்டநாயகன் விருதை வெல்வார்ர் என எதிர்பார்க்கப்படுகிறது.