வெஸ்ட் இண்டீஸ் டெஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வங்கதேச அணியானது தற்சமயம் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி முதலும் டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் விலகியுள்ளதும் உறுதியாகியுள்ளது.
முன்னதாக காயம் காரணமாக வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹிமும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினார். அதன்படி, ஆஃப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அறிவிக்கட்டிருந்த நிலையில் தற்சமயம் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் விலகியுள்ளார்.
வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தொடரும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், மெஹிதி ஹசன், தஸ்கின் அஹ்மத், ஹசன் மஹ்முத், நஹித் ரானா, ஜக்கர் அலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக் ஷோராப், மஹிதுல் இஸ்லாம் அன்கான், லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ் (துணைக்கேப்டன்), தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, ஹசன் முராத்.