BANW vs INDW, 2nd T20I : வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஸ்மிருதி மந்தனா 13 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷஃபாலி வர்மாவும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் தான் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், யஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இறுதியில் அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்திரேகர், மின்னு மணி ஒருசில பவுண்டரிகளை விளாசினர். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் சுல்தானா 3 விக்கெட்டுகளையும், ஃபஹிமா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷமிமா சுல்தானா, ஷதி ராணி ஆகியோர் தலா 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய முர்ஷிதா காதும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருபக்கம் ரன்களைச் சேர்க்க மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின் 38 ரன்களைச் சேர்த்திருந்த நிகர் சுல்தானாவும் ஆட்டமிழந்தார்.
இதனால் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.