பிபிஎல் 13: மேத்யூ, டி ஆர்சி அபாரம்; சிட்னி தண்டரை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!

Updated: Tue, Dec 19 2023 23:03 IST
பிபிஎல் 13: மேத்யூ, டி ஆர்சி அபாரம்; சிட்னி தண்டரை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்! (Image Source: Google)

பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக பான்கிராஃப்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை களமிறங்கினர். இதில் ஹேல்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேத்யூ கில்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் பான்கிராஃப்டுடன் இணைந்த ஓலிவியர் டேவிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய பன் கிராஃப்ட் அரைசதம் கடந்தார். 

அதேசமயம் மறுபக்கம் டேவிஸ் 32 ரன்களுக்கும், அலெக்ஸ் ரோஸ் 46 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த பான்கிராஃப்ட் 74 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. அடிலெய்ட் அணி தரப்பில் டேவிட் பைன், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - டி ஆர்சி ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ ஷார்ட் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 82 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமப்பக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த டி ஆர்சி ஷார்ட் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கிறிஸ் லின் 14 ரன்களிலும், ஜேக் வெதர்லேண்ட் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அத்ன்பின் களமிறங்கிய ஆடம் ஹோஸ் 9 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை