பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!

Updated: Tue, Dec 12 2023 19:33 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கான்பெர்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு ஜோஸ் பிரௌன் - காலின் முன்ரோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரௌன் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மெக்ஸ்வீனி 29 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோ அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து களமிறங்கிய ரென்ஷா 20, சாம் பில்லிங்ஸ் 23 ரன்களும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. சிட்னி தண்டர் அணி தரப்பில் தன்வீர் சங்கா 3 விக்கெட்டுகளையும், ஸமான் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ரன்கள் ஏதுமின்றியு, மேத்யூ கிலிக்ஸ் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த கேமரூன் பான்கிராஃப் - ஒலிவர் டேவிஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் பான்கிராஃப்ட் 25 ரன்களுக்கும், டேவிஸ் 35 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ரோஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கிறிஸ் கிரீனும் 30 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ரன்களை சேர்க்க முடியவில்லை.

இதனால் 19 ஓவர்களிலேயே சிட்னி தண்டர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களுக்கு ஆல அவுட்டானது. பிரிஸ்பேன் அணி தரப்பில் ஸேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ குன்னமென், பால் வால்டர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை