பிபிஎல் 13: சதத்தை தவறவிட்ட காலின் முன்ரோ; மெல்போர்ன் அணிக்கு 215 டார்கெட்!
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு கேப்டன் உஸ்மான் கவாஜா - காலின் முன்ரோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் முன்ரோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் கேப்டன் உஸ்மான் கவாஜா 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே தனது பங்கிற்கு 30 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸும் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த காலின் முன்ரோ சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 99 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்துள்ளது. மெல்போர்ன் அணி தரப்பில் ஜோயல் பேரிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் குல்டர் நைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.