பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் இடம்பிடித்திருந்தார். 

Advertisement

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய சிக்சர்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த வின்ஸ் - பிலீப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் வின்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹென்றிக்ஸும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். 

Advertisement

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிலீப் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஜோர்டன் சில்க்கும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. தண்டர் அணி தரப்பில் மெக்கண்ட்ரூ, தன்வீர் சங்கா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தண்டர் அணிக்கு டேவிட் வார்னர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். பின் 28 ரன்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேமரூன் பான்கிராஃப்ட் 2 ரன்களிலும், டாம் கொஹ்லர் காட்மோர் 6 ரன்களுக்கும், ஒலிவியர் டேவிஸ் 15 ரன்களுக்கும், டேனியல் சம்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், கிறிஸ் கிரீன் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 19.5 ஓவர்களில் சிட்னி தண்டர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் ஸ்டீவ் ஓ கீஃப் 3 விக்கெட்டுகளையும், ஹெய்டன் கெர் மற்றும் சீன் அபோட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியும் அசத்தினர். இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News