ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக்கின் 14ஆவது சீசன் இன்று கோலாகலாமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக ஜோ கிளார்க் மற்றும் தாமஸ் ரோஜர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோ கிளார்க் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய சாம் ஹார்பர் ஒரு ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் தாமஸ் ரோஜர்ஸ் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய கார்ட்ரைட் 18 ரன்களிலும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து 37 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஸ்டொய்னிஸும் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய டாம் கரண் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட நிலையில், மறுபக்கம் மெக்கன்ஸி, ஆடம் மில்னே உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். பின் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை எடுத்திருந்த டாம் கரணும் விக்கெட்டை இழக்க, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி தரப்பில் ஜெய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும், லான்ஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 6 ரன்களுக்கும், கீட்டன் ஜென்னிங்ஸ் 4 ரன்னிலும், மேத்யூ ஹர்ஸ்ட் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 33 ரன்னிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கூப்பர் கனோலி - கேப்டன் ஆஷ்டன் டர்னர் இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கூப்பர் கனோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 64 ரன்களை எடுத்திருந்த நிலையில் கூப்பர் கனோலி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்டன் டர்னர் 37 ரன்களையும், நிக் ஹப்சன் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசாத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பெர்த் அணியின் ஜெய் ரிச்சர்ட்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News