ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது சரியான முடிவு தான் - சௌரவ் கங்குலி!

Updated: Thu, Feb 29 2024 22:15 IST
ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது சரியான முடிவு தான் - சௌரவ் கங்குலி! (Image Source: Google)

இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது.  இதில் இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது பெயர்களை பிசிசிஐ தனது ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளது. காரணம் இருவரும் பிசிசிஐ-யின் உத்தரவையும் மீறி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே இஷான் கிஷானை இந்திய டி20 அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ள பிசிசிஐ, இங்கிலாந்து க்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயரையும் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியது.  அதன்பின் இருவரையும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால் இஷான் கிஷான் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக ஹர்திக் பாண்டியாவுடன் பயிற்சி மேற்கொண்டார். அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயர் கயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலக முயற்சித்தார். இதனால் கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரையும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில், இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்தது தனக்கு ஆச்சரிமளித்ததாக முன்னாள் பிச்சிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் முக்கிய போட்டியான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனவே தான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை பிசிசிஐயின் முடிவு சரியானது தான். 

இந்திய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் முதல்தர கிரிக்கெட்டை விளையாட வேண்டும், ஏனென்றால் அதுதான் இந்த நாட்டில் கிரிக்கெட்டின் அடிப்படை. நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக இருந்தாலும், முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். இன்னும் ஒருசில தினங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடவுள்ளார். ஆனாலும் இஷான் கிஷான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஏனெனில் அவர் இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட தேர்வாகியுள்ளார். 

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அவர் மிகப்பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக ஏது அவர் இப்படி முதல் தர கிரிக்கெட்டில் விளையாடவில்லையா என்பது எனக்கு தெரியவில்லை. வெளிப்படையாக கூறவேண்டும் எனில் ரஞ்சி கோப்பை அடிப்படையில் தான் தேசிய அணி தேர்வு செய்யப்பட்டதே தவிர, ஐபிஎல் தொடரின் அடிப்படையில் இல்லை. நம்மில் பலரைப் போலவே எனது கேரியரின் பிற்பகுதியில் தான் ஐபிஎல் தொடர் வந்தது. என்னைப் பொறுத்தவரை ரஞ்சி கோப்பை தொடர் தான் இந்திய அணிக்கு தேர்வாக மிக முக்கியமான போட்டி என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை